பிரச்சனை என்ன?
1990கள் வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது.
அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.
இப்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன்.
இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா.
மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ – யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.
பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மூன்றாம் உலக போர் நடைபெறுமா?
சாதாரணமாக ஆரம்பித்த பங்காளிச் சண்டை இன்று உலகமே அச்சம் கொள்ளும் மூன்றாம் உலகப்போர் வர காரணமாக அமைந்து விடுமோ என்கின்ற அளவிற்கு மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது இன்று அச்சம் கொள்ளும் அளவிற்கு மிக மோசமான நிலையில், இரு நாடுகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

எல்லையில் பதற்றம் அதிகரிப்பதன் காரணமாக உக்ரைன் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ரஷ்ய நாடும் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறி அடிக்க காத்துக்கொண்டு இருக்கின்றனர். போர் பதற்றம் அதிகரிப்பதால் அவசர அவசரமாக வெளிநாட்டு மக்களை அவர்களின் நாடுகளில் இருந்து அப்புறப்படுத்த இரு நாடுகளும் முனைப்பு காட்டி வருகிறது.
உக்ரைன் நாடு ரஷ்ய நாட்டின் ராணுவத்தை சமாளிக்க தன் படை பலத்தை நிரூபிக்க அடிக்கடி போர் ஆயத்த சோதனைகளை செய்து மிரட்டி வருகிறது. சமாதான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில் போருக்கு இரு நாடுகளும் தயாராகி வருகின்றன. சோவியத் யூனியனில் பிளவுப்பட்ட இந்த இரு நாடுகளும், தற்போது எதிரெதிர் முனையில் நின்று கொண்டு சண்டையிட இருக்கிறது.

இந்த நேரத்தில் நாட்டில் இருந்து வெளிநாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்றி வரும் உக்ரைன் நாடு இந்தியாவில் இருந்து அங்கு சென்று வாழும் இந்திய மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
மேலும்,உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் எதிரொலியாக எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பங்கு சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குசந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்தது
வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் இரும்பு என அனைத்து துறைகளும் 2 முதல் 6 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. போர் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் பட்சத்தில், உலகம் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள் || 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுமா?