Monday, December 4, 2023
Homeசெய்திகள்பரமக்குடியில் அதிகாரிகளின் ஆசியோடு கள்ள லாட்டரி விற்பனை

பரமக்குடியில் அதிகாரிகளின் ஆசியோடு கள்ள லாட்டரி விற்பனை

பரமக்குடி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி தினந்தோறும் அதிகாரிகளின் ஆசியோடு விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

துணி பையில் லாட்டரி சீட்

லாட்டரி வியாபாரிகள் ஆட்களை ஆங்காங்கே நியமித்து பரமக்குடியில் படுஜோராக கள்ள லாட்டரியை விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கென கள்ள லாட்டரி வியாபாரிகள் துணி பைகளை வைத்து கொண்டு பரமக்குடி நகர் பகுதியில் வலம் வருகின்றனர்.

கள்ள லாட்டரி வியாபாரிகள் தங்களுக்கென்று ஓர் கடையை வைத்துக்கொண்டு ஏதோ வியாபாரம் நடத்துவது போன்று கடை நடத்தி வருகின்றனர்.

அங்குதான் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான கடைகள் லாட்டரி விற்பனை செய்யும் கடைகளாகவே இருக்கின்றன.

அத்துடன் ஒன்றிரண்டு கணினிகளை வைத்து கொண்டு ஒற்றை எண் லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

கருப்பு ஆடுகள்

வெளி மாநிலத்தில் இருந்து வரும் தனியார் சொகுசு பேருந்துகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக கொண்டு வந்து அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதை மோப்பம் பிடித்த ஒரு சில கருப்பு ஆடுகள் அவர்களை தனியாக அழைத்துச் சென்று எங்களை மட்டும் கவனித்து விடுங்கள் என்று ஒரு பெருந்தொகையை வாரந்தோறும் ஆட்டையை போட்டு வருகின்றன.

ஏழைகளின் பணம் சுரண்டல்

ஏழை, எளிய குடும்பங்கள் அன்றாடம் வேலை செய்தால்தான் வாழ்க்கையை நடத்தக்கூடிய சூழல் இருக்கிறது.

ஆனால் பரமக்குடி நகர் பகுதியில் கேரள லாட்டரி 1 எண், 2 எண், 3 எண் என்ற கோணத்தில் ரூ.100 முதல் ரூ.25,000 வரை பரிசு விழும் என்று நம்பி ஏழைகளின் பணத்தை சுரண்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருடனை தேள் கொட்டிய கதையாக

இதனால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளனர். ஆனால் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க முடியாமல் திருடனை தேள் கொட்டியது போல அமைதி காத்து வருகின்றனர். இதில் அதிகம் நெசவாளர்கள், கட்டிட கூலி தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காவல்துறை மறுப்பு

ஆனால் காவல் நிலையத்தில் கேட்டால் எங்கள் காவல் சரக எல்லையில் லாட்டரி விற்பனை அடியோடு இல்லை என்று மறுத்து கூறுகின்றனர்.

அத்துடன் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் இருக்கும் புகார்களை பார்ப்பதற்கே நேரம் இல்லை என்கின்றனர்.

பரிதாப நிலை

ஆனால் லாட்டரியில் பணத்தை விட்டுவிட்டுச் செல்லும் தொழிலாளர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. மொபைல் போன் வைத்து கொண்டு வாட்ச்அப் மூலம் பரிசு விழுந்த எண்கள் அறிவிக்கப்படுகிறது.

இதில் மொபைல் போனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பரிசு 10 லட்சம்

ஒரு எண்ணுக்கு ரூ.100ம், 2 எண்ணுக்கு ரூ.ஆயிரமும், 3 எண்ணுக்கு ரூ.25 ஆயிரமும் இதுபோக ஏ,பி,சி என்றும் அத்தோடு 5 எண் வரை வேண்டுமானால் சீட்டின் விலை ரூ.600ம் அதற்கான பரிசுத்தொகை ரூ.10 லட்சம் வரை நீண்டு கொண்டே போவதால் அதன் வியாபாரிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.

கை கட்டி வாய் பொத்தி

இப்படி ஒரு நெட்வொர்க் சத்தமின்றி நடந்து வருகிறது.

கள்ள லாட்டரி வியாபாரிகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் சமூகவிரோதிகள் முன்பு கை கட்டி வாய் பொத்தி அவர்கள் போடும் அற்ப ‘ப’ விட்டமீனை வாங்கி கொண்டு எதுவுமே தெரியாதவர்கள் போல இருந்து வருகின்றனர்.

குண்டர் சட்டம் பாயுமா

எனவே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Also Read ||ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது இந்தியா மார்ட் நிறுவனம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments