காட்டுநாயக்கர் சாதி சான்றிதழ் வழங்கிய பரமக்குடி ஆர்.டி.ஒ முருகனுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன காட்டுநாயக்கர் மக்கள்
ஜாதிச்சான்றிதழ் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு ஜாதிச் சான்றிதழை பரமக்குடி ஆர்.டி.ஒ முருகன் வழங்கினார்.
பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பார்த்திபனூர், வேந்தோணி பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் முன்னோர்களை, ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள், விளைநிலங்களை விலங்குகள், பறவைகளிளிடமிருந்து பாதுகாக்க, மதுரை தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலிருந்து அழைத்து வந்தனர்.
பின்னர் இச்சமூக மக்கள் காடுகளில் முயல், நரி மற்றும் பறவைகளை வேட்டையாடுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.
மேலும் பாம்புகளை பிடித்தும் வித்தை காட்டி வந்தனர். நாளடைவில் வனத்துறையினரின் கட்டுப்பாடுகளால் பாரம்பரிய தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு சென்றும் வருகின்றர்.
இந்நிலையில் இவர்களுக்கு பல வருட காலமாக ஜாதி சான்றிதழ் வழங்காமல் இருந்தது. இதனால் இவர்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் கல்வியில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயில முடியாத நிலையில் இருந்து வந்துள்ளனர்.
காட்டு நாயக்கன் என்ற ஜாதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடையாது என ராமநாதபுரம் மாவட்ட அரசு பதிவேடுகளில் இருப்பதால் ஜாதி சான்றிதழ் கொடுக்காமல் வருவாய்துறையினர் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாக பதவி ஏற்ற பரமக்குடி ஆர்.டி.ஓ முருகன் இவர்களது கோரிக்கையை ஆய்வுசெய்து பரமக்குடி பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் மக்களுக்கு காட்டுநாயக்கர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழை வழங்கினார்.
இதனை பெற்றுக் கொண்ட காட்டு நாயக்கன் சமூக மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு தங்களது 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாக இதை கருதுவதாக கண்ணீர் மல்க பரமக்குடி ஆர்.டி.ஒ முருகனுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஆர்.டி.ஒ நேர்முக உதவியாளர் ராஜகுரு, பரமக்குடி தாசில்தார் தமீம்ராஜா, உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.