Saturday, December 2, 2023
Homeஅறிந்து கொள்வோம்ஆண்களின் உடல் ஆரோக்யத்தை அதிகரிக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு

ஆண்களின் உடல் ஆரோக்யத்தை அதிகரிக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு

சமூக மாற்றம், மேலை நாடுகளின் தாக்கம், நாகரிக வளர்ச்சி  போன்ற பல்வேறு காரணங்களால் நமது பழமையான, மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள் வெளியுலகிற்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன.

அவற்றுள் ஒன்றுதான் தண்ணீர்விட்டான் கிழங்கு. அஸ்பார்கஸ்(Asparagus) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதனுடைய மருத்துவப் பயன்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

* இந்தியாவில் அனைத்துப் பிரதேசங்களிலும் காணப்படும் இந்த வகை தாவரம் மெலிதான தண்டுகளுடன் 2 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மிதவெப்ப மண்டல பகுதிகளிலும் அதிகம் வளரக் கூடியது.

* சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் இந்த தாவரம் கசப்பு சுவை உடையது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, மலம் இளக்கியாகவும், உறக்கத்தைத் தூண்டும் காரணியாகவும் செயல்படுகிறது.

தண்ணீர்விட்டான் கிழங்கு

* கிரேக்க மருத்துவரான டயாஸ்கொரிடஸ் என்பவர் இந்த தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் பற்றியும், அதனுடைய மருத்துவ குணம் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த கஷாயம், சிறுநீரகம் தொடர்பான கோளாறுகளைச் சரிசெய்ய வல்லது. அதுமட்டுமில்லாமல், தொடை, நரம்புகளில் உண்டாகும் வலியையும் போக்கும் தன்மை உடையது.

* கை, கால் மூட்டுகளில் சேர்கிற கழிவுப்பொருட்களைச் சிறுநீர்மூலம் வெளியேற்ற துணை செய்கிறது. அதன் காரணமாக, கீழ்வாதம் என்ற
குறைபாடு சரி செய்யப்படுகிறது.

* பெண்களுக்கு உண்டாகிற மலட்டுத்தன்மையை முழுவதுமாகப் போக்கி அவர்கள் தாய்மை அடைய வழிவகை செய்கிறது.

* தண்ணீர்முட்டான் கிழங்கு எனவும் அழைக்கப்படுகிற இந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தைலம், கழுத்து சுளுக்கு, மூட்டு வலி ஆகிய குறைபாடுகளையும் குணப்படுத்தக் கூடியது.

* வயிற்றுப்போக்கு, குடல் வலி போன்றவற்றை சரி செய்து, பசியுணர்வை அதிகரிக்கச் செய்யும். அதே வேளையில் இதனுடைய பட்டைகள் விஷம் நிறைந்தவை.

*அஸ்பார்கஸை மூலப்பொருளாக கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிற பலவிதமான மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முக்கியமாக சதாவேரி கிரிதா, பால கிரிதா, விஷ்ணு தைலம், நாராயண தைலம் போன்றவை உற்பத்தி செய்யப்
படுகின்றன.

தண்ணீர்விட்டான் கிழங்கு

* தண்ணீர்விட்டான் கிழங்கு செடியின் இலைகளை நன்றாக சுத்தம் செய்து நைசாக அரைத்து, தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் 2 கிராம் அளவு தூளைப் பசுமாட்டு நெய்யுடன் பிசைந்து உண்டு வர, உடல் ஆரோக்கியம் பெறும்.

* Asparagus Racemosus என்ற தாவரவியல் பெயரால் குறிக்கப்படும் இந்த மூலிகைக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இருப்பதாக, பாரம்பரிய முறையில் சிகிச்சை அளித்து வரும்மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

* வடமொழியில் அஸ்பார்கஸ் மூலிகைச்செடி சதாவரி எனக் குறிக்கப்படுகிறது. இதற்கு ‘நூறு நோய்களின் மருந்து’ எனத் தமிழில் அர்த்தம் சொல்லப்படுகிறது. அதாவது, சதா என்ற சொல்லுக்கு, ‘நூறு’ எனவும், வரி என்ற சொல்லுக்கு, ‘நோய்களின் மருந்து’ எனவும் பொருள்.

* இந்தச் செடியின் வெள்ளை நிற மலர்கள் மிகவும் அழகானவை; பார்ப்போரைக் கவர்ந்து இழுக்கக் கூடியவை. எனவே, மருத்துவப் பயன்பாட்டுக்காக மட்டுமில்லாமல், அழகுக்காகவும் வரவேற்பு அறைகளிலும், தோட்டங்களிலும் இது வளர்க்கப்படுகிறது.

* கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் கிழங்கு சாறை இரவில் தூங்கப் போகும்முன் கால்களிலும், அடிப்பாதங்களிலும் தடவி வர நல்ல பலன் உண்டாகும்.

* அஸ்பார்கஸின் சாறு உடல்நலத்துக்கு உகந்த அருமருந்தாக திகழ்கிறது. மெலிந்த உடலைப் புஷ்டியாக மாற்றவும், வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு முதலான பாதிப்புக்களையும் முற்றிலும் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

* நீரிழிவு மற்றும் எலும்புருக்கி நோய், தைராய்டு போன்ற பாதிப்புக்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. அதுமட்டுமில்லாமல், வெரிகோஸ் வெயின் என குறிப்பிடப்படுகிற ரத்த நாள வீக்கத்தையும் சரி செய்ய இந்த தாவரம் பயன்படுத்தப்படுகிறது.

* பெண்களுக்கு ஏற்படுகிற அனைத்துவிதமான நோய்களையும் சரி செய்யும் வலிமை இந்த தாவரத்திற்கு இருப்பதால், ‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படுகிறது.

*பலவிதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்தச் செடியின் கிழங்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் குளிர்ச்சி தன்மை கொண்டது. அதன் காரணமாக ‘நீர் விட்டான்’ ‘நீர் வாளி’ முதலான பெயர்களாலும் இந்த கிழங்கு சுட்டப்படுகிறது.

* இயற்கையாகவே தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற இந்த மூலிகை, காடுகள் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடியது. இதனுடைய அரிய மருத்துவப் பயன்கள் பரவலாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்த பின்னர், நெல் முதலான உணவுப்பயிர்களுக்கு இணையாக, சமவெளி இடங்களில் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

* நமது பாரம்பரிய மருத்துவமுறைக்கு முன்னோர்களான சித்தர் பெருமக்கள், உலகிற்குப் பெரும் சவாலாக இருந்துவரும் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் தண்ணீர்விட்டான் கிழங்கு செடிக்கு உண்டு என நிரூபித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments