Sunday, February 25, 2024
Homeசினிமாசொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

நான் போட்ட நாற்காலியை எட்டி உதைத்தார் நட்டி ; கர்ணன் சிதம்பரம்

கழிவுகளை ஏற்றி வந்த 20 லாரிகளை தைரியமாக மடக்கி கேரளாவுக்கே திருப்பி அனுப்பிய கர்ணன் நடிகர்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சினிமாவில் நுழைந்த தென்காசி இளைஞர்

நடிப்பு தாகம் உள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் விட்டுவைக்காது.

உடனே சென்னையை நோக்கி படையெடுக்க வைக்கும். அப்படி நடித்து பெரிய நடிகராகி புகழ்பெற வேண்டும் என்கிற கனவுடன் தினமும் கோலிவுட்டை நோக்கி படை எடுத்து கொண்டிருப்போர் பலர்.

அவர்கள் மத்தியில், சமூக விழிப்புணர்வு காரியங்களை செய்துவரும் ஒருவர் தானும் சினிமாவில் நடிகனாக மாறி ஓரளவு புகழ் பெற்றால் அதன்மூலம் அந்த விழிப்புணர்வு குறித்த விஷயங்களை மக்களிடம் இன்னும் பரவலாக கொண்டுபோய் சேர்க்க முடியுமே என்கிற எண்ணத்தில் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார் என்றால் அது நிச்சய்ம் ஆச்சர்யமான விஷயம் தான்.

அதிசயக்கத்தக்க அந்த மனிதனின் பெயர் சிதம்பரம். அதன் முதல் படியாக கர்ணன், ருத்ர தாண்டவம் படங்களில் ரசிகர்கள் கண்களில் படும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிதம்பரம், வரும் நாட்களில் அவர்களது மனதில் பதியும் நடிகராக மாறுவேன் என்கிறார்.

தென்காசியை சேர்ந்த சிதம்பரம், என்ஜினீயரிங் படித்துவிட்டு குற்றாலம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார் அதேசமயம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பல விஷயங்களை முன்னெடுத்து செய்துவரும் சிதம்பரம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இவர் தென்காசி கால்பந்து விளையாட்டு சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்..

சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை காட்டிவரும் சிதம்பரம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு லாரிகளில் கழிவுகளை கொண்டுவந்து கொட்டி செல்லும் அநியாயத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று 20 லாரிகளை மடக்கி பிடித்து அவற்றை மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி அதிர வைத்தவர்.

அப்படி இவர் செய்த காரியத்தால் இதையே தொழிலாக செய்து வந்தவர்களின் எதிர்ப்பையும் கொலை மிரட்டலையும் கூட சம்பாதித்துள்ளார்

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் இன்னும் ஆழமாக ஏற்படுத்துவதற்கு சினிமா தான் சரியாக இருக்கும்.

அதிலும் குறிப்பாக ஒரு நடிகனாக மாறி இந்த விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அது இன்னும் அதிக அளவில் கவனம் பெறும் என்பதாலேயே நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் சிதம்பரம்.

சரியாக அந்த சமயத்தில் தென்காசியில் தனுஷ் நடித்து வந்த கர்ணன் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஆடிசனில் கலந்து கொண்டார். அதில் தேர்வாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிதம்பரம், அடுத்ததாக, மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில், நாயகனின் கார் டிரைவர் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

“தற்போது 143 என்கிற வெப்சீரிஸில் வில்லனாக ஐந்து எபிசோடுகளில் நடித்துள்ளேன். பல மில்லியன் பார்வைகளை தாண்டி இந்த தொடருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜுமுருகன் டைரக்ஷனில் கார்த்தி நடிக்க உள்ள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்” என்கிறார் சிதம்பரம்.

நடிகராக மாறியது குறித்து சிதம்பரம் கூறும்போது, “கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் குறிப்பாக தென்காசி போன்ற ஆறுகளும் விளைநிலங்களும் நிறைந்த பகுதியில் கொட்டும்போது அவை நச்சுத்தன்மை அடைந்து மக்களுக்கு பலவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதற்காகத்தான் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதேசமயம் இதை சினிமாவில் ஒரு நடிகனாக இருந்துகொண்டு செய்தால் இதற்கு இன்னும் மிகப்பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்கிற எண்ணத்தில்தான் நடிகராகவே மாறினேன்” என்கிறார் சிதம்பரம்.

“கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரி நட்டி தனுஷின் கிராமத்திற்குள் நுழைந்ததும் உட்கார நாற்காலி கேட்பார்.

அதை ஒருவர் கொண்டுவந்து போட்டதும் அதன்பிறகு அதை எட்டி உதைப்பார் அல்லவா ? அந்த கதாபாத்திரத்தை எனக்கு மாரிசெல்வராஜ் கொடுத்தார். அதில் யோகிபாபுவை மிரட்டும் காட்சியிலும் நடித்தேன்.. ஆனால் நீளம் காரணாமாக அதை படத்திலிருந்து நீக்கி விட்டனர். அந்த படத்தில் நடித்ததன் மூலம் தற்போது ஓரளவிற்கு வெளியே தெரிய துவங்கியுள்ளேன்..

படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் ஓரளவு வெளிச்சத்தில் எனது சமூக விழிப்புணர்வு பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்” என்கிற சிதம்பரம், கேஜிஎப் கருடா ராம் போல வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

அதேபோல தென்காசி பகுதியில் பிரபல மொபைல் நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரத்திற்காக ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்து வந்தது ஆனால் அப்படி அவர்கள் போட்டி நடத்தும் இடம் ஜல்லிக்கட்டுக்கு ஏற்றதும் அல்ல.. மாடுகளுக்கு பாதுகாப்பானதும் அல்ல.

அதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களுக்கும் அது ஆபத்தானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை நிறுத்தியவர் சிதம்பரம். இதனால் உள்ளூர்க்காரர்கள் பலரின் கோபத்திற்கும் கூட ஆளானார் சிதம்பரம்.

இயக்குநர்கள் மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி இருவரும் தங்களது படங்களில் ஜாதி விஷயத்தில் கவனம் செலுத்துவதாக சிலர் கூறுகிறார்கள் சொல்லப்போனால் அது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அவர்கள் இருவரின் படங்களில் நடித்தேன் என்று கூட சொல்லாம்.. ஆனால் அவர்கள் எந்த இடத்திலும் ஜாதியை உள்ளே நுழைப்பதில்லை என்பதை நேரடியாகவே பார்த்தேன்..” என்கிறார் முத்தாய்ப்பாக

 

இதையும் படியுங்கள் || பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் “எலி பேஸ்ட்” விற்பனை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments