கடந்த 10 ஆண்டுக் காலம் அ.தி.மு.க சிறப்பான ஆட்சி தந்தது. அதைப் பத்தே மாதத்தில் கெடுத்துவிட்டார்கள் தி.மு.க-வினர்.
இதுவரை தி.மு.க ஆட்சியில் எந்தப் புதிய திட்டங்களும் வரவில்லை.
இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர அதிக வாய்ப்பு உள்ளது” எனக் கரூரி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியிருக்கிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2024-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசி வருகிறார்.
இதுவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இதை பேசிவந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி 2024-ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்ற பேச்சு திடீரென இப்போது பேசும் பேச்சு இல்லை.
கடந்த ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வந்த அதிமுக நிர்வாகிகளிடம் இதே கருத்தைச் சொல்லித்தான் அவர்களை தேற்றி அனுப்பினார் என்று தகவல்கள் வெளியாயின.
அதேபோல திமுக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கழித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடமே இந்தக் கருத்தை தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போதும் எடப்பாடி பழனிச்சாமி இதைப் பேசி கட்சியினரை உற்சாப்படுத்தினார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் செல்லும் இடங்களில் எல்லாம் 27 அமாவாசைகளில் திமுக ஆட்சி இருக்காது என்றும் 2024-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.
ஓ. பன்னீர்செல்வமும் இதை பேச ஆரம்பித்திருப்பதால், இது அதிமுகவின் குரலாகவும் முழுமையாக மாறியிருக்கிறது.
அதிமுக எதிர்பார்ப்பதைப் போல 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுமா? கடந்த 2018-ஆம் ஆண்டிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய பேச்சு நாடு முழுவதும் பேசுபொருளானது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து எல்லா மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தும் எண்ணத்தை பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு அதிமுக அப்போது எதிர்ப்பை தெரிவித்தது. ‘
தற்போதைய ஆட்சியின் பதவிக் காலத்தை குறைக்க அனுமதிக்க மாட்டோம்’ என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு எதிர்த்தது. தற்போது, திமுக ஆட்சி அமைந்து 9 மாதங்களே கடந்துள்ள நிலையில், அன்று ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இப்போது அது நடைபெற வேண்டும் என்ற ஆசையை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வர வேண்டுமென்றால், அதற்கான சட்டத்தை முதலில் கொண்டு வர வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மோடி அடிக்கடி வெளிப்படுத்தியும் வருகிறார். ஒரு வேளை 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து மா நிலங்களுக்கும் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், தற்போது மா நில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தாமல், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
ஆனால், தற்போது 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக ஆர்வமுடன் சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு கர்நாடாகவிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்கு எல்லாம் பாஜக உற்சாகவே தயாராகி வருகிறது. அத்திட்டம் அமலுக்கு வருகிறது என்றால், பல சட்டம் சார்ந்த முன்னெடுப்புகள் நடக்க வேண்டும். எனவே, அதிமுகவின் ஆசை நிறைவேறுமா என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.
இதையும் படியுங்கள் || தமிழ்நாடு ரேஷன் கடையில் காலியாக உள்ள 3803 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் சேர்க்கப்படும் என அறிவிப்பு