நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம்
பரமக்குடி சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் கைத்தறித்துறை சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஜீவா நகரில் அமைந்துள்ள மகாலட்சுமி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பரமக்குடி எமனேஸ்வரம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், பணியாளர்கள், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குனர் டாக்டர் வே.சேரன் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாமினை தலைமையேற்று துவக்கி வைத்தார். வாசன் கண் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த கண் பரிசோதனை முகாமில் கண் புரை, கண் நீர் அழுத்தம், கண் விழித்திரை பரிசோதனை மற்றும் கண் கண்ணாடி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்சிடி மற்றும் கம்ப்யூட்டர் கண் பரிசோதனைகள் வழங்கப்பட்டன. எமனேஸ்வரம் ஜீவா நகர் மகாலட்சுமி காலனி மற்றும் காந்திஜி காலனி பகுதியினை சேர்ந்த 210க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.