பரமக்குடியில் “பான் புரோக்கிங் லைசென்ஸ்” மூலம் கந்து வட்டி வசூல்
தாசில்தார் ஆய்வு செய்ய கோரிக்கை
பரமக்குடியில் பான் புரோக்கிங் லைசென்ஸ் மூலம் ஏழை, எளிய கூலி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கந்து வட்டி வசூல் செய்யும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாய கூலி தொழிலாளர்கள், நெசவு செய்யும் கூலி தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ், விபத்து நடந்தால் மருத்துவச் செலவுகள், சுப காரியங்கள் செய்ய பணம் தேவைப்படும், அது மாதிரியான சூழ்நிலைகளில் நமக்கு கை கொடுப்பது தங்க நகைகள் தான். இப்படி நாம் தங்கத்தை அடமான வைக்கும் போது அவசர தேவைக்கு தனியார் நகை கடைகளில் தங்களது நகையை அடமானம் வைத்துவிட்டு பணம் பெற்று சென்று விடுகின்றனர்.
மாதம் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் – கந்துவட்டி வசூல்
பணம் கிடைத்தவுடன் திரும்ப நகையை மீட்க வரும் பொழுது மூன்று சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை கந்துவட்டி வசூல் கொடுத்தால்தான் நகையை திரும்ப கொடுக்க முடியும் இல்லையென்றால் உங்களால் என்ன செய்ய முடியுமே செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களை ஒருமையில் மிரட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஒரு வருடத்திற்குள் நகையை திருப்பாத பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடகு நகையை ஏலத்தில் விற்று விடுகின்றனர். இதனால் ஏழை எளிய கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடியில் சிக்கி தங்கள் உயிரை மாய்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
ஒரே கடைக்கு – இரண்டு லைசென்ஸ்
தனியார் நகைக் கடைகளில் அடகு வைக்கும் போது அந்த நகை கடைகள் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத நகைக் கடைகளை தவிர்ப்பது நல்லது. சில சமயம் அடகு கடை நடத்துபவர்கள் இரவோடு இரவாக எஸ்கேப் ஆவது நடைபெற்று வருகிறது. பான் புரோக்கிங் லைசென்ஸ் மூலம் நகை அடகு பிடிக்கும் நகை கடைக்காரர்கள் தனியாக அடகு கடை வைத்திருக்க வேண்டும். ஆனால் நகை கடையுடன் சேர்த்து அடகு கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர். இதனால் ஒரே கடை முகவரியை பயன்படுத்தி நகை அடகு கடை மற்றும் நகை கடைகள் வைத்திருப்பது தவறு என தெரிந்தும் நகைக்கடை உரிமையாளர்கள் வைத்துள்ளனர். பரமக்குடி தாசில்தார் ஒவ்வொரு நகை அடகு கடைக்கு சென்று ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
வீடு கடை சோதனை
இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி பான் புரோக்கிங் லைசென்ஸ் மூலம் நகை அடகு பிடிக்கும் தனியார் நகை கடைக்காரர்கள் மினிமம் 1 சதவீதம் வட்டி மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வட்டி மாதந்தோறும் கட்ட வேண்டும் என ஏழை எளிய மக்களை வற்புறுத்தி கந்துவட்டி வசூல் செய்து வருகின்றனர். கந்து வட்டி வசூல் செய்யும் தனியார் நகை கடைக்காரர்கள் ஆண்டுதோறும் முறையாக வருமான வரி கட்டுவதில்லை. ஆகையால் வருமான வரி துறையினர் நகை கடை வைத்திருப்பவர்கள் மற்றும் அடகு கடை வைத்திருப்பவர்களின் வங்கி கணக்குகள், சொத்து மதிப்பு, வீடுகளை ஆய்வு செய்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை.
தாசில்தார் ஆய்வு
ஆன்லைன் மூலம் பான் புரோக்கிங் லைசென்ஸ்க்கு பதிவு செய்ய வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட தாசில்தார் நேரடியாக கடைக்கு வந்து ஆய்வு செய்து கடை சரியாக உள்ளதா, நகை வைப்பதற்கு பாதுகாப்பு இரும்பு பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளதா போன்ற பல்வேறு விவரங்களை ஆய்வு செய்த பின்பு பான் பிரேக்கிங் லைசென்ஸ் வழங்க வேண்டும். பான் புரோக்கிங் எந்த பெயரில் மற்றும் எந்த முகவரியில் லைசென்ஸ் வாங்கப்பட்டுள்ளதோ அதே பெயரில் பில் புக் அடிக்க வேண்டும். கடைக்கு முக்கியமாக கிரில் கேட், தொட்டி லாக், சிசிடிவி கேமரா, அலாரம் போன்றவைகள் பாதுகாப்பு கருதி வைத்திருக்க வேண்டும்.
விழிப்புணர்வு
காவல்துறை, வருவாய்த்துறை, ரிசர்வ் வங்கி இணைந்து மக்களிடம் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கந்து வட்டி வசூல் செய்யும் குண்டர்கள், தனியார் நகை அடகு கடைகள் மீது சட்டப்படி புகார் செய்து எவ்வாறு நகைகளை மீட்க வேண்டும் போன்ற ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். ஒவ்வொரு தனியார் நகை அடகு கடைகள் முன்பு மத்திய மாநில அரசுகளிடம் பெற்ற லைசென்ஸ் மற்றும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எந்த துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விவரங்களை கடைகள் முன்பு வைக்க வேண்டும்.
பாதுகாப்பு
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி குறைவு, நகைக்கு பாதுகாப்பு அதிகம் என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும். நகையை பணம் கட்டி திருப்ப முடியாத நேரங்களில் கூட பலமுறை நமக்கு நினைவூட்டல் கடிதம் தேசியமையமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து அனுப்பப்படும். ஆனால் கடைசி நேரத்தில் கூட ஏலம் நடைபெறுவதற்கு முன்பு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணத்தைக் கட்டி நகையை மீட்க முடியும். தேசியமையமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு நகைகளை சீல் வைத்து முறையாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அதிக பணம் – குறைந்த நேரம்
ஆனால் தனியார் நகை அடகு கடைகள் பாலித்தீன் பைகளில் வைத்து நகைகளை ஏனோதானவென்று வைத்து விடுவதால் நகை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஏழை எளிய கூலி வேலை செய்யும் மக்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட தனியார் நகை அடகு கடைகளை நாடுவதற்கு முக்கிய காரணம் அதிக பணம் மற்றும் குறைந்த நேரத்தில் பணம் கொடுப்பதால் தனியார் அடகு நகைக் கடைகளை நாடுகின்றனர். ஆனால் கந்து வட்டி வசூல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரிவதே இல்லை.
எனவே ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி தனியாக குழு அமைத்து ஏழை எளிய மக்களின் உயிரை குடிக்கும் குண்டர்கள் மற்றும் கந்து வட்டி வசூல் செய்யும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்