ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, டிராபிக் இன்ஸ்பெக்டர் செந்தில்சுரேஷ் ஆகியோர் ஐந்துமுனை பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு அளித்து பாராட்டினர்.
பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா கூறியதாவது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலகட்டத்தில் சுமார் 249 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதில் 99 சதவீதம் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவரும் உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்க கூடாது. சாலை பாதுகாப்பு என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல. அது அனைவரின் வாழ்க்கையை பாதுகாப்பதாகும்.
எனவே இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், உடன் பயணிப்பவரும் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். மேலும் நகர எல்லையில் வாகனத்தை இயக்கும்போது 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மிகாமல் மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்