Tuesday, June 6, 2023
Homeஅரசியல்பரமக்குடி அருகே மேலப்பார்த்திபனூர் வாரச்சந்தையில் கோடிக்கணக்கில் ஊழல்

பரமக்குடி அருகே மேலப்பார்த்திபனூர் வாரச்சந்தையில் கோடிக்கணக்கில் ஊழல்

பரமக்குடி அருகே மேலப்பார்த்திபனூர் வாரச்சந்தையில் கோடிக்கணக்கில் ஊழல்

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பார்த்திபனூர் வாரச்சந்தை  வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை  சந்தை கூடுவது வழக்கம். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக தொடர்ந்து வாரந்தோறும் வாரச் சந்தை நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலப்பார்த்திபனூர் வாரச்சந்தை குத்தகைக்கு விடாமல் ஊராட்சியின் மூலம் வாரச்சந்தை குத்தகை பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஒரு முறை நடக்கும் வாரச்சந்தையில் ஒரு லட்சத்திற்கு மேல் வசூல் செய்யப்படும் தொகை ஊராட்சி கணக்கில் வரவு வைக்காமல் கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரி சந்திரனிடம் கேட்டபோது,” நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இளையான்குடி, பரமக்குடி, போகலூர், வீரசோழன், மறவமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாரச்சந்தைக்கு சென்று கடை போட்டு வியாபாரம் செய்து வருகிறேன். இந்த ஊர்களில் எல்லாம் மினிமம் தொகையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே குத்தகை பணம் வசூல் செய்கின்றனர்.

வாரம் ஒரு முறை கூடும் இந்த வாரச் சந்தையில் சுமார் 500 கடைகளுக்கு மேல் கடைகள் போட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் மேலப்பார்த்திபனூர் வாரச் சந்தைக்கு குத்தகை பணம் வசூல் செய்ய வரும் குண்டர்கள் மினிமம் 300 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை குத்தகை பணம் என்ற பெயரில் அடாவடி வசூல் செய்து வருகின்றனர். மற்ற வாரச் சந்தைகளில் எல்லாம் 50 ரூபாய்க்குள் தான் குத்தகை பணம் வாங்குகிறார்கள். ஏன் உங்கள் ஊரில் மட்டும் இவ்வளவு தொகை அதிகமாக வாங்குகிறீர்கள் என்று கேட்டால், கேட்கும் வியாபாரிகளை ஒருமையில் திட்டுவதும், வரும் வாரங்களில் கேட்ட வியாபாரிகளை கடை போட விடாமல் விரட்டி விடுகின்றனர். கடைபோடும் வியாபாரிகளிடம் குத்தகை பணம் பெறும் குண்டர்கள் உரிய ரசிது கொடுக்காமல் கொள்ளை அடித்து வருகின்றனர்.”

இதுகுறித்து மேலப்பார்த்திபனூர் ஊராட்சி செயலாளர் சேகரிடம் கேட்டபோது, ” மேலப்பார்த்திபனூர் ஊராட்சியில் வசூல் செய்யப்படும் குத்தகை தொகைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. எதுவாக இருந்தாலும் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரேயடியாக பதிலைக் கூறி முடித்தார்.”

இதுகுறித்து மேலப்பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேலுவிடம் கேட்டபோது,”குத்தகை பணம் சம்மந்தமாக கேட்ட போது எதுவாக இருந்தாலும் துரைராஜ் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று நக்கலாக பேசிவிட்டு உடனடியாக செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.”

இதுகுறித்து பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சண்முகநாதனிடம் கேட்டபோது, “கடந்த சில மாதங்களாக கொரானோ இருந்து வருவதால் டெண்டர் விடப்படாமல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக சந்தை நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற தலைவரின் மூலம் வசூலிக்கப்படும் குத்தகைப் பணம் ஊராட்சி கணக்கில் வரவு வைக்காமல் இருந்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக உடனே விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.”

பார்த்திபனூர் வார சந்தையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரப்படவில்லை. வாரச்சந்தை நடக்கும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் வாரச்சந்தை மலம் கழிக்கும் இடமாக மாறி வருகிறது.  சந்தைக்கு அடிப்படைத் தேவைகளான குப்பைகளை அகற்றுதல், குடிநீர், சாக்கடை வசதி,  மின்சார வசதி, கழிப்பிட வசதி உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை மேலப்பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார். வாரச் சந்தைக்கு என்று இடமில்லாததால், வேறு இடத்தில் வியாபாரிகள் தெருவோரங்களில் கடைகள் அமைத்து வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மாலை 6 மணிக்கு மேல் வாரச்சந்தையில் மின் விளக்கு வசதி இல்லாததால் இருளில் வியாபாரிகள் செல்போனை லைட்டை  பயன்படுத்தி  வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஊராட்சி மன்றம் மூலம் வாரச் சந்தைக்கு என்று இடம் ஒதுக்காததால் ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் அப்பகுதி வழியாக வரும் இரு சக்கர, நான்கு சக்கர, நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.

வாரத்திற்கு ஒரு முறை கூடும் வாரச்சந்தை சனிக்கிழமை அன்று வியாபாரிகள் போட்டு செல்லும் குப்பைகளை மேலப்பார்த்திபனூர்  ஊராட்சி மன்ற தலைவரின் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்கள் சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அந்த குப்பைகளிலிருந்து தினந்தோறும் துர்நாற்றம் வீசி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி அந்த குப்பைகளில் இருந்து உருவாகும் புழுக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொது மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதே நிலைமை தான் பல மாதங்களாக  இருந்து வருகிறது.

ஆண்டிற்கு கோடிக்கணக்கில் வாரச் சந்தையில் லாபம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால அரசாங்கத்திற்கு சேர வேண்டிய தொகை கோடிக்கணக்கில் குண்டர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். வாரச் சந்தைக்கு என சொந்தமாக இடம் வாங்கி புதிதாக கடைகள் கட்டி கொடுக்க வேண்டும்.

அதேபோல் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று முறைப்படி டெண்டர் விட்டு வியாபாரிகளிடம் உரிய குத்தகைத் தொகையை வாங்க வேண்டும். வாரச்சந்தைக்கு தேவையான  அடிப்படை வசதிகளை செய்தும், வாரச்சந்தையில் கடை போடும் வியாபாரிகளிடம் கூடுதலாக வசூலிக்கும் குத்தகை தொகையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments