பரமக்குடி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பதால், பரமக்குடி நகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என பொதுமக்கள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி சார்பில் சுமார் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மீன் கடைத்தெருவில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தினசரி மீன் கடைகள் மற்றும் மீன் பதப்படுத்தும் குளிர்சாதன அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு ரூபாய் 6 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த நவீன தினசரி மீன் மார்க்கெட் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் சாலையோ ஒரங்களில் மீன்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பரமக்குடியில் இயங்கும் 100க்கும் மேற்பட்ட மீன் கடைகள் தற்போது சாக்கடையின் அருகில் போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.இதனால் சாக்கடையில் உற்பத்தியாகும் ஈ மற்றும் கொசுக்கள் அருகில் போடப்பட்டுள்ள மீன்களில் உட்காருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மீன் கழிவுகளை ஆங்காங்கே அப்படியே போட்டு விட்டு செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.
உடனடியாக பரமக்குடி நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தெருவோர மீன் கடைகளை அப்புறப்படுத்தி நவீன தினசரி மீன் மார்க்கெட்டுக்குள் கொண்டுவந்து மார்க்கெட் செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.