ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் பான்பராக் கான்ஸ் விற்பனை அமோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ், பான்மசாலா, குட்கா, சைனிகைனி உட்பட பல்வேறு போதைப் பொருட்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஆசியோடு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி கான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதை முழுவதுமாக தடை செய்தது.
இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இது போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள் எவ்வளவு விலை ஆனாலும் அதிக விலை கொடுத்து வாங்கி அதை தொடர்ந்து உட்கொண்டு வருகின்றனர்.
இதனால் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு உயிரை பறித்து வருகிறது.
விலை விபரம்
சில்லறை விலையில், 5 ரூபாய்க்கு விற்ற ஹான்ஸ் 30 ரூபாய், 8 ரூபாய்க்கு விற்ற சூப்பர் பாக்குகள் 15 ரூபாய்க்கும், 2 ரூபாய்க்கு விற்ற சாந்தி பாக்கு 7 ரூபாய்க்கும், பான்பராக் வகைகள் 15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
6 ரூபாயக்கு விற்ற சைனிகைனி 10 ரூபாயக்கும், 5 ரூபாய்க்கு விற்ற சிறிய மாணிக்சந்த், 12 ரூபாய்க்கும், பெரிய மாணிக்சந்த் பாக்கெட் 25 ரூபாய்க்கும் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரி கூறியதாவது,
“தமிழக அரசு போதை பொருட்களுக்கு தடை விதித்திருந்தாலும் தங்குதடையின்றி மறைமுகமாக மற்ற பொருட்களை விற்பது போல் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
மதுரை, சென்னை, திண்டுக்கல், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பரமக்குடியில் உள்ள மூன்று மொத்த வியாபாரிகளுக்கு லாரிகள் மூலமாகவும், நேரடியாகவும் மற்ற பொருட்களை இறக்குவது போல் இதையும் குடோன்களில் இறக்கி வைத்துவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப கொண்டுவந்து தினந்தோறும் கடைக்கு வரும் வியாபாரிகளிடம் விற்று கொள்ளை அடித்து வருகின்றனர்.
தங்கள் கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே போதைவஸ்து பொருட்களை கொடுத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் அமைந்துள்ள முருக கடவுளின் பெயரைக் கொண்ட கடைகளில் வைத்துத்தான் போதைவஸ்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் மொத்த வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தான் போதை வஸ்துகளை விற்பனை செய்யும் வெளிமாநில வியாபாரிகளுக்கு பணத்தை வர வைக்கின்றனர்.
இவ்வளவு விபரங்கள் அதிகாரிகளுக்கு தெரிந்தும் அதிகாரிகள் வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். “என்றார்.