கீழக்கரை வட்டம் எக்ககுடி, புதுக்குளம், கொத்தங்குளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பாசன பயன்பாட்டிற்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக உடனடியாக வரத்து கால்வாய்களை சீரமைத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கால்வாய் சேதம்
இந்த ஆய்வின்போது, எக்ககுடி ஊராட்சியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்து மற்றும் ஆக்கிரமிப்புகளாலும் தண்ணீர் வராமல் விளை நிலங்கள் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு – கள ஆய்வு
பாசன கண்மாய்யை பார்வையிட்டதுடன், மேலும் புதுக்குளம் மற்றும் கொத்தங்குளம் பாசன கண்மாய்களுக்கு எட்டிவயல் கால்வாய் மற்றும் ரெகுநாதபுரம் கால்வாய் வழியாக வைகை ஆற்றில் இருந்து இப்பகுதிகளுக்கு பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்த நிலையில் தற்போது இரண்டு கால்வாய்களும் ஆக்கிரமிப்புகள் மற்றும் சீரமைக்காமல் இருந்து வரும் நிலையினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

பொதுப்பணித்துறைக்கு உத்தரவு
பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடியாக தூர் வாரும் பணியினை மேற்கொண்டு விரைவாக எக்ககுடி, புதுக்குளம், கொத்தங்குளம் ஆகிய பகுதியில் உள்ள பாசன கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் விரைந்து கொண்டு வர வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் எக்ககுடி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிகள் நடைபெறும் பொழுது உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பள்ளி ஆய்வு
பின்னர் கொத்தங்குளம், எக்ககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவியிடம் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சுகாதார வளாகங்கள் தூய்மையாக உள்ளதா என பார்வையிட்டு அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்குள்ள சுகாதார வளாகங்கள் தூய்மையாக இருக்கும் வகையில் நாள்தோறும் நன்றாக பராமரித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
நூலகம் ஆய்வு
தொடர்ந்து எட்டிவயல் பெரிய கண்மாயின் கழுங்கு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டதுடன் எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்திற்கு சென்று பார்வையிட்டு அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்க வேண்டும்.
ஊராட்சிகளுக்கு எச்சரிக்கை
அதேபோல் ஊராட்சிகளில் நாள்தோறும் சேரிக்கக் கூடிய குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தரம் பிரித்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற ஊராட்சிகளில் ஆய்வின்போது திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படாமல் இருப்பது கண்டறிந்தால் அந்த ஊராட்சியில் அபராதம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.