Friday, March 29, 2024
Homeஅரசியல்பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் "எலி பேஸ்ட்" விற்பனை.

பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் “எலி பேஸ்ட்” விற்பனை.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பரமக்குடியில் “எலி பேஸ்ட்” சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் கடைகளில் “எலி பேஸ்ட்” விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகளில் விற்பனை

பரமக்குடி பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், காய்கறி கடை, மருந்து கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை செய்வதால் தற்கொலை செய்ய நினைப்பவர்களுக்கு எலி பேஸ்ட் ஈசியாக கிடைப்பதால் வாங்கி சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலிவு விலை – எலி பேஸ்ட்

எலிகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் உள்ள உணவு பொருட்களை பதம் பார்த்து விடுவதால் எலிகளை கொள்வதற்காக தயாரிக்கபட்டது தான் எலி பேஸ்ட், எலி கேக், எலி மருந்து பவுடர்.

ஆனால் எலிகளைக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட எலி பேஸ்ட்டை வாங்கி மனிதர்கள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். மலிவு விலையில் எல்லா கடைகளிலும் கிடைப்பதால் “எலி பேஸ்டை” மனிதர்கள் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை – அரளி விதை

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து கொலை செய்தது தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த நவீன உலகில் அரளி விதை, பூச்சி மருந்துகள் சாப்பிட்டு இறக்கும் மரணம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இந்நிலையில் எலி தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக தயாரிக்கப்பட்ட எலி பேஸ்ட்களை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது.

கல்லீரல், மூளை, நுரையீரல்

எலி பேஸ்ட் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குடலில் ஒட்டிக் கொண்டு விடும். பின்னர் ரத்தத்தில் கலப்பதால் கல்லீரல் செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய் விடுகிறது. மனித உடலில் உள்ள ரத்தம் உறையாமல் இருப்பதால் மூளை மற்றும் நுரையீரல் உள் பகுதியில் ரத்தம் கசிந்து இறக்க நேரிடுகிறது.

பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் "எலி பேஸ்ட்" விற்பனை.

தற்கொலை மரணம்

தனிமை, மனச்சோர்வு, குடும்ப பிரச்னை, தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு, பெற்றோர் கண்டிப்பு, காதல் தோல்வி, கடன் தொல்லை, கள்ள காதல் உட்பட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எலி பேஸ்ட்டை வாங்கி சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மிரட்டுவதற்காக எலி பேஸ்ட்

மன விரக்தியில் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களை மிரட்ட விளையாட்டாக எலி பேஸ்ட் சாப்பிடுவது பல உயிர்களைப் பறித்து விடுகிறது.

எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டவர்களை காப்பாற்ற இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பரமக்குடி பகுதியில் நடக்கும் தற்கொலை மரணங்களில் 75% எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக தான் உள்ளது.

கிரிமினல் வழக்கு, சிறை, அபராதம்

இது குறித்து வேளாண் அதிகாரி கூறியதாவது, “உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எலி பேஸ்ட்டுக்களை உரிய அனுமதி பெற்ற வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண் மருந்து கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.

எலி பேஸ்ட் வாங்குபவர்களிடம் ஆதார் கார்டு, போன் நம்பர் கண்டிப்பாக கடைக்காரர்கள் வாங்கி சேகரித்து வைக்க வேண்டும்.

உரிய அனுமதி பெறாமல் விற்பனை செய்வது ஆய்வில் தெரிய வந்தால் விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுவர்.

அதுமட்டுமின்றி 6 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது.” என்றார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

எனவே “எலி பேஸ்ட்” விற்பதை தடுக்க வேண்டிய வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படியுங்கள் || இளையான்குடி பகுதியில் அதிகாரிகளின் ஆசியோடு மணல் திருடும் கும்பல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments