Friday, March 29, 2024
Homeஅறிந்து கொள்வோம்கரிகாலன் கட்டிய கல்லணை! தமிழரின் பெருமையை அறிவோம்

கரிகாலன் கட்டிய கல்லணை! தமிழரின் பெருமையை அறிவோம்

சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்-பாலை, பொருநராற்றுப் படை முதலிய பத்துப் பாட்டு நூல்கள் புகழ்ந்து .உரைக்கின்றன.

கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது கரிகாற்சோழன் கட்டிய கல்லணை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக் கொண்டி-ருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை.

பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப் பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழ நாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ-வேந்தன்

கரிகாலன் கட்டிய கல்லணை

அணையின் வரலாறு

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 1 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.

பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான்.

ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.

காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர்.

அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.

அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

கரிகாலன் கட்டிய கல்லணை

சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.

கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார்.

இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.

அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.

அணை பற்றிய பொறியியல் ஆய்வு

முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது.

காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது.

சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு.

கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது.

அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது – கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது – சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள்.

இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது.

ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது.

 

இதையும் படியுங்கள் || தஞ்சைப் பெருவுடையார் கோயில்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments