பரமக்குடி அருகே 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழக்கொடுமலூரில் பழமையான எழுத்துப்பொறித்த கல் ஒன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த கருப்புராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். கல்லில் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் கூறியதாவது,
இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூரில் வடக்கு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளது. இதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் ஒன்பது வரிகள் இடம் பெற்றுள்ளன, பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டது, ஆனாலும் அவற்றில் சில வரிகள் மட்டும் தெளிவாக தமிழ் எழுத்துகள் இருந்தன. (அந்தராயம் உபயம்,வல்லூர், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட) என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது.
நிவந்தமாக கொடுத்த கல்வெட்டு
இவற்றை வைத்து பார்க்கும்போது கல்வெட்டில் ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் நான்கு எல்லையைக் குறிக்கும் விதமாகவும் அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாக உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. மேலும், கல்வெட்டு இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதலாம். இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் என கூறினார்கள்.