இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் தாமிர மின்கம்பி திருடப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மண்டபம் ரயில்வே குடியிருப்புகளுக்கு தாமிர கம்பி மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலை யில், அங்கு 46 மீட்டர் தாமிர கம்பியை இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இதுகுறித்து மதுரை ரயில்வே குற்றப்புலனாய்வு ஆய்வாளர் சுருளிக் குமார், ராமேசுவரம் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் அரவிந்த் குமார், உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பிடிபட்ட திருடன்
இதில், மண்டபம் ரயில் எல்லைக்குள் சந்தேகத்துக்கு இடமாக சென்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். மண்டபம் ஐ.என்.பி. காலனியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் நம்பு பாண்டி (22) என்பதும், திருடிய தாமிர மின்கம்பியை பழைய இரும்பு பொருள்கள் வாங்கும் கடையில் விற்றதும் தெரிய வந்தது.
மேலும் அளித்த தகவலின் பேரில் திருடப்பட்ட தாமிர மின்கம்பிகளை வாங்கிய மண்டபம் ஜமீன்சத்திரம் தெரு பகுதியில் பழைய இரும்பு பொருள்கள் வியாபாரம் செய்யும் தர்மராஜிடம் (71) விசாரணை நடத்தினர். இதில் அவர் நம்பு பாண்டி உள்பட 2 பேரிடம் 30 மீட்டர் தாமிர கம்பியை வாங்கிக் கொண்டு ரூ. 23 யிரம் கொடுத்தது தெரிந்தது. எஞ்சிய 16 மீட்டர் தாமிர மின்கம்பியை நம்பு பாண்டியிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப்பதிவு நம்பு பாண்டி, தர்மராஜ் ஆகியோரை கைது செய்து ராமேசுவரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.