தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணி
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- அறிவிப்பு
அதன்படி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான தேதிகளை குறித்தும் அரசு தெரிவித்துள்ளது.
- கடைசி நாள்
வரும் அக்., 10ஆம் தேதியிலிருந்து தாலுகா அலுவலகம் மூலமாக அறிவிப்பாணை வெளியிடப்படும். காலி பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு கடைசி தேதி நவ., 7 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி பெறும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவ., 14ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்கின்றனர்.
- தேர்வு எழுதும் முறை
இதன்பிறகு, வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பரீட்சையை நவ., 30ல் நடக்க இருக்கிறது. எழுத்துத்திறன் பரீட்சையை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்.
- பணி ஆணைகள்
வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்லலாம். அதன் பிறகு டிச., 15 மற்றும் 16ஆம் தேதிகள் நேர்முகத்தேர்வு நடைபெறும். டிச.,19ல், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு அன்றே பணி ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தாசில்தார்கள்
தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையான அறிவிப்பு அந்த அந்த மாவட்டங்களில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.