ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு 300 கோடி
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் ஆய்வாளர்கள், உற்பத்தியாளர்கள், தொடக்க வேளான் கடன் சங்க செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
புதிய திட்டங்கள்
அப்போது வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கூறியதாவது, பொதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டம், பின் தங்கிய மாவட்டம் என சொல்லி வந்த நிலையை மாற்றி கடந்த காலங்களில் வேளாண்மைத் துறை, கூட்டுறவு துறை மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இன்றைய காலத்தில் விவசாயிகள் பல்வேறு தொழில் நுட்பங்களுடன் சிறந்த முறையில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
300 கோடி ஒதுக்கீடு
மேலும் விவசாய பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள ஏதுவாக நடப்பு ஆண்டிற்கு பயிர்கடன் வழங்க 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகள் பெற்று பயன்பெற 300 கோடி கடன் வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
நடமாடும் வாகனம்
முன்னதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கிராமப் பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் 54 நடமாடும் மத்திய கூட்டுறவு வங்கி வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், ராமநாதபுரம் துணைப்பதிவாளர் சுப்பையா, பரமக்குடி துணைப்பதிவாளர் மைதீன் ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.