7 தனியார் சட்ட கல்லுாரிகளுக்கு அனுமதி!
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில், 17 சட்டக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள சீர்மிகு சட்ட கல்லுாரி, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லுாரி உட்பட, 15 கல்லுாரிகள், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
இதுதவிர, சேலத்தில் மத்திய சட்ட கல்லுாரி மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்ட கல்லுாரி ஆகியவை, தனியார் கல்லுாரிகள். இவற்றில் மட்டுமே, எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
புதிய சட்டக் கல்லூரிகள்
இந்நிலையில், புதுக்கோட்டை மதர் தெரசா சட்ட கல்லுாரி, திருப்பூர் கே.எம்.சி.கல்லுாரி, ஈரோடு சட்ட கல்லுாரி, தென்காசி தங்கப்பழம் சட்ட கல்லுாரி, துாத்துக்குடி துளசி பெண்கள் சட்ட கல்லுாரி, கன்னியாகுமரியில், முகில் சட்ட கல்லுாரி ஆகிய ஏழு தனியார் சட்டக் கல்லுாரிகளுக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த கல்லுாரிகளில் நடப்பு கல்வி ஆண்டில், ஐந்து ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு எல்.எல்.பி., படிப்புகளில், தலா, 60 பேர் வீதம் சேர்த்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கட்டணம் – 85 ஆயிரம்
இவற்றில் அரசு ஒதுக்கீட்டில், 65 சதவீத இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 35 சதவீத இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த படிப்புக்கு ஆண்டுக்கு, 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்பேத்கர் சட்ட பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், தனியார் கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை வழங்கப்படும் என, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.