ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மருத்துவ முகாமினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதன் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முழு உடல் பரிசோதனை
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15,000/- வரையிலும், அரசு மருத்துவமனைகளில் ரூ.4,000/- வரை செலவாகும். முழு உடற்பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இத்திட்டம் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து தரப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தை பொறுத்த வரை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மகப்பேறுயியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற இருக்கிறது.
அரசு தலைமை மருத்துவமனை உயர் சிகிச்சை
மேலும் இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை மற்றும் UD/ID உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும் புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று தேவையான நபர்களுக்கு இம்முகாமிலே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும். இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 1200த்திற்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டுள்ளனார். இதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் சிறியவர் முதல் பெரியவர் என பொதுமக்கள் முழு அளவில் பங்கேற்று முழு உடல் பரிசோதனை செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.அர்ஜீன்குமார் (இராமநாதபுரம்), மரு.பொற்செல்வன் (பரமக்குடி), வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரதீப் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



