ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
ராமநாதபுரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி கைதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 71 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்
புதிய பேருந்து நிலையம் முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலை மையில் ஒன்றியச் செயலாளர்கள் அசோக்குமார், மருதுபாண்டியன், நகர் செயலாளர் பால்பாண்டி, மகளிரணி நிர்வாகி கவிதா சசிகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 44 பேரை நகர் போலீஸார் கைது செய்தனர். சாயல்குடியில் ஒன்றியச் செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பரமக்குடி
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் முன்னாள் டாக்டர் முத்தையா சதன்பிரபா உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி
கமுதியில் ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையிலும், திருவாடானையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆணிமுத்து தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்பன் சாலைப் பாலம் அருகே அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் முத்தாண்டி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 26 பேரை பாம்பன் போலீஸார் மேலும் கைது செய்தனர்.
ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை எம்ஜிஆர் சிலை அருகே மறியல் செய்த முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட 52 பேரையும், திருப்புவனம் பேருந்து நிலையம் அருகே மறியல் செய்த ஒன்றியச் செயலாளர் சோனை ரவி தலைமையில் 20 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் தேவகோட்டை,காரைக்குடி, திருப்பத்தூர்,இளையான்குடி, மானாமதுரை, உள்ளிட்ட 105 பேரை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.