குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற அரியனேந்தல் பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டு விழா.
இந்தியாவின் சிறந்த ஊராட்சி விருது பெற்ற அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்தியாவின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சிறந்த ஊராட்சிகளுக்கான விருது அக்டோபர் 2 ஆம் தேதி டெல்லியில் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம், திண்டுக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து மூன்று ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. சிறந்த ஊராட்சி விருது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அரியனேந்தல் ஊராட்சி தூய்மைக்கான சிறந்த ஊராட்சி என விருது பெற்றது. அரியனேந்தல் ஊராட்சியில் கழிவு நீரை சுத்திகரிப்பு, மறுசுழற்சி செய்து இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மைக்கான சிறந்த ஊராட்சி என அரியனேந்தல் ஊராட்சி விருது பெற்றுள்ளது.
குடியரசு தலைவரிடம் விருது
இந்த விருதினை குடியரசு தலைவரிடம் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் டெல்லியில் பெற்றார். அவருடன் அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தலைவர்கள் கூட்டமைப்பு
பரமக்குடி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் மணிமுத்து கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அரியனேந்தல் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.
பாராட்டு விழா
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமை தாங்கினார். துணை தலைவர் சரயு ராஜேந்திரன், ஆணையாளர் உம்முல் ஜாமியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் செட்டியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரயு ராஜேந்திரன் ஆகியோரை வாழ்த்தி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், கிராம மக்களும் பேசினர்.
இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாப்பா சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், கோகுலம் சேம்பர் உரிமையாளர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள் குமார், சண்முகவேல், சண்முகம், ராமசாமி, கோபால் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அரியனேந்தல் ஊராட்சி செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.