புதுடில்லி: கடந்த நிதியாண்டில், இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களின் மொத்த விற்பனை, 9.80 சதவீதம் அதிகரித்து, 6.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கான உதிரி பாகங்கள் வழங்கல் 8.90 சதவீதம் அதிகரித்து ரூ.5.18 லட்சமாக இருந்தது. மொத்த உதிரிபாக உற்பத்தியில், மின்சார வாகன சந்தைக்கு வழங்கப்படும் உதிரிபாகங்கள் மட்டும் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் உதிரிபாகங்களின் ஏற்றுமதி 5.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது, அதே சமயம் அதன் இறக்குமதி 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது. இதனால் வர்த்தக உபரி ரூ.2,513 கோடியாக உள்ளது.
வாகனத் துறையின் வளர்ச்சியின் காரணமாக, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் துறையின் பெரும்பாலான பிரிவுகள் கொரோனா வைரஸுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வலுவான பொருளாதார வளர்ச்சி, ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமான கொள்கைகள் போன்றவை இந்த நிதியாண்டில் வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சியை உறுதி செய்யும் என வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.