மும்பை:இதுவரை இல்லாத வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த ஒரு நிறுவனம், அதன் பங்குகளை சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் புதிய பங்குகளை வெளியிட்ட டிராபிக்சல் ஐடிஎஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் பட்டியலிடப்படுவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக செபி அறிவித்துள்ளது.
எஸ்எம்இ பிரிவைச் சேர்ந்த இந்நிறுவனம், ரூ.45 கோடி நிதி திரட்ட 10 முதல் 12ம் தேதி வரை ரூ.66 முதல் ரூ.70 வரையிலான புதிய பங்குகளை வெளியிட்டது. இது பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக பட்டியலிடப்பட இருந்தது, விண்ணப்பங்கள் 300 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் பெறப்பட்டன.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் அடிப்படை செயல்பாடுகள், இருப்புநிலைக் குறிப்பு மற்றும் திரட்டப்படும் நிதியின் பயன்பாடு ஆகியவை குறித்து, முதலீட்டாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, கேள்விகளுக்கு அந்நிறுவனம் உரிய பதில் அளிக்கும் வரை, பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்படாது என ‘செபி’ சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
திரட்டப்பட்ட தொகையை பயன்படுத்த தடை விதிக்கப்படும். சர்ச்சை தீர்க்கப்படும் வரை, மூன்றாம் தரப்பு (அ) நடுவரின் கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும். தீர்வுக்கான கால அவகாசம் இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு செய்யப்படாவிட்டால், முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் தொகை திரும்பப் பெறப்படும்.