பரமக்குடியில் மனித உயிரை காவு வாங்கும் பிரியாணி
உறங்கும் உணவு பாதுகாப்புத்துறை
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிறிய கடை முதல் பெரிய கடை வரை தரமற்ற பிரியாணி விற்பனை செய்து வருவதாகவும் அதை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கில் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறைந்த முதலீடு
பிரியாணி தயாரிக்க குறைந்த முதலீடு தேவைப்படுவதால் தரமற்ற பிரியாணி அரிசி, இராசாயன நிறமூட்டிகள், தரமற்ற பாமாயில் எண்ணெய் ஆகிய பொருட்களை வாங்கி வந்து ஏனோ தானோ வென்று பிரியாணியை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
லைசென்ஸ்
நகராட்சி பகுதியில் உணவகம் அமைத்து இருந்தால் நகராட்சி லைசென்ஸ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை லைசென்ஸ், தீயணைப்புத்துறை லைசென்ஸ் பெற்று தான் உணவகம் நடத்த வேண்டும். ஆனால் பரமக்குடி பகுதியில் உள்ள ஒரு சில பெரிய ஓட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரை எவ்வித லைசென்ஸ் பெறாமல் தொடர்ந்து பிரியாணி கடைகள் நடத்தி வருகின்றனர்.
இறந்த கோழிகள்
கோழி மொத்த வியாபாரிகள் திண்டுக்கல், பழனி, பல்லடம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து லாரி மூலம் தினந்தோறும் கோழிகள் கொண்டுவந்து சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். லாரிகளில் கோழிகள் சுமார் 5 டன் வரை கொண்டு வரப்படும். அப்படி கொண்டு வரப்படும் போது சுமார் 200க்கு மேற்பட்ட கோழிகள் இறந்து விடும். இந்த இறந்த கோழிகளை ரூபாய் 50 கொடுத்து வாங்கி வருகின்றனர் பிரியாணி கடைக்காரர்கள். பின்னர் இறந்த கோழிகளை வைத்து பிரியாணி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இறந்த ஆடுகள்
விபத்து, நோய்வாய் பட்டு இறக்கும் ஆடுகளை தேடிப்பிடித்து சொற்ப விலைக்கு வாங்கி வந்து பிரியாணி வியாபாரிகள் பிரியாணி செய்து விற்று வருகின்றனர்.
தொற்றுநோய்கள்
இறந்த ஆடு, கோழி, ரசாயன நிறமூட்டிகள், ரேஷன் கடை பாமாயில் ஆகியவற்றை பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இதனால் தேவையில்லாத உடல் சோர்வு, உடல் உபாதகைகள் ஏற்படுகிறது. குறிப்பாக நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் போக்கு, செரிமானக் கோளாறு உண்டாகிறது.
தரமற்ற பிரியாணி அரிசி
சென்னை, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து தரம் குறைந்த பிரியாணி அரிசியை மொத்தமாக வாங்கி வருகின்றனர். இதனால் தான் பரமக்குடி பகுதியில் பிரியாணி குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழிப்புணர்வு
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பு துறை தனி கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றால் மனித உயிர் தொடர்ந்து காவு போய்க் கொண்டு தான் இருக்கும்.

நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி உறங்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையை தட்டி எழுப்பி நடவடிக்கை எடுக்க வைத்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.