கமுதி அருகே ஊ.கரிசல்குளம் கிராமத்துக்கு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது. இந்த கிராமத்திலிருந்து மாணவர்கள் தினமும் 10 கி.மீ. தொலைவுக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் பயணித்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தனர். ஏற்கெனவே இந்த ஊருக்கு பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கோரிக்கை
இதையடுத்து இந்த பேருந்தை மீண்டும் காலை மாலை நேரங்களில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் வியாழக்கிழமை ஊ.கரிசல்குளம் கிராமத்துக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டது. அப்போது கமுதி போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராஜ்குமார், ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.