பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26ம் தேதி தொடங்கியது. 206 நாடுகளில் இருந்து 10,714 பேர் பங்கேற்றனர். 17 நாட்கள் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா நேற்றுடன் நிறைவடைந்தது.
நிறைவு விழா பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடந்தது. இதனை அரங்கில் இருந்த 80,000 ரசிகர்கள் கண்டுகளித்தனர். பிரெஞ்சு நீச்சல் வீரர் லியோன் மார்கண்ட் ஒலிம்பிக் தீபத்தில் இருந்து தீபத்தை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்தார். அனைத்து நாடுகளின் விளையாட்டு நட்சத்திரங்களின் அணிவகுப்பு நடந்தது.
இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம், பாலே நடனம் இடம் பெற்றன.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.பாரீஸ் மேயர் ஆன் ஹிடால்கோ பாரம்பரியப்படி ஒலிம்பிக் கொடியை ஐஓசி தலைவர் தாமஸ் பாக்கிடம் வழங்கினார். இது லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸிடம் வழங்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
உலகம் முழுவதும் இருந்து வந்த வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ‘குட்-பை’ சொல்லி விடைபெற்றனர். அடுத்த ஒலிம்பிக் போட்டி வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ல்சில் நடக்க உள்ளது. இதை எதிர்பார்த்து விளையாட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.