பாரிஸ்: டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் நாட்டை விட்டு வெளியேற பிரான்ஸ் அரசு தடை விதித்தது.
வாட்ஸ்அப் போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால், டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. பணப் பரிமாற்ற மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களுக்கு டெலிகிராம் செயலி ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றங்கள் அனுப்பிய சம்மனுக்கு டெலிகிராம் பதில் அளிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இரட்டை குடியுரிமை இந்நிலையில், ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் விமான நிலையத்துக்கு வந்த டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (39) கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவை பூர்வீகமாக கொண்ட துரோவ், அந்நாட்டு அரசின் அழுத்தம் காரணமாக பிரான்ஸ் குடியுரிமை பெற்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு குடிபெயர்ந்தார்.
கண்டனம் இத்தகைய சூழ்நிலையில் தான் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது உலக அளவில் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் மற்றும் அமெரிக்க அரசின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வெளியேற தடை இந்நிலையில், துரோவை கைது செய்துள்ள பிரான்ஸ் அரசு, அவர் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜாமீன் பத்திரமாக ரூ.46 கோடி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கிடைத்தாலும், நீதிமன்றத்தின் கண்காணிப்பில்தான் இருப்பார்; வாரம் இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதும் நிபந்தனை.
குற்றச்சாட்டு
டெலிகிராம் செயலி மூலம், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியிட அனுமதித்ததாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு வழிவகை செய்து விட்டதாகவும், துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.