நோன்பு காலத்தில் செய்யவேண்டிய தர்மம்
தானம் குறித்த நபி மொழிகள் வருமாறு:
‘பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’.
ரகசியமாக தானதர்மம் செய்வது, இறைவனின் கோபத்தை தணிக்கிறது.
தீய மரணம் சம்பவிப்பதிலிருந்து தடுக்கிறது. ஒருவரின் வலது கை செய்யும் தர்மம், அவரின் இடது கைக்கே தெரியாமல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், அவர் இறைவனின் நிழலில் நிழல் பெறுவார்.
‘தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு நிழல் தருவான்.
அவர்களில் ஒருவர் யாரெனில், தமது இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக்கரத்தால் ரகசியமாக தர்மம் செய்பவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’.
‘சோதனையில் ஆழ்த்தப்படும் போது, தொழுகை, தானதர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’.
‘உங்களுடைய நோய்க்கு தர்மத்தை கொண்டு நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’.
இந்த தானங்கள் வரிசையில் நோன்புப் பெருநாளின் தானிய தர்மமும் இடம் பெறுகிறது. நோன்புப் பெருநாளின் அதிகாலையில் பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றப்படும் தானிய அறம் ‘ஸதகதுல் பித்ர்’ (நோன்புப் பெருநாள் தர்மம்) என்று அழைக்கப்படுகிறது.
ஒருவர் நோன்பு நோற்கும் போது அவர் செய்யும் சிறு சிறு தவறுகளால் அவரின் நோன்புகள் விண்ணை எட்டாமல் மண்ணிற்கும், விண்ணிற்கும் இடையே தடுத்து நிறுத்தப்படுகின்றன.
அவர் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றும்போது, நோன்பின் குறைகள் நிறைவு செய்யப்பட்டு, அவை விண்ணுலகை வந்தடைகின்றன.
‘நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
அது நோன்பாளியிடம் இருந்து வெளிப்படக்கூடிய வீண் செயலையும், தீய பேச்சையும் சுத்தம் செய்கிறது;
ஏழைகளின் பசியையும் போக்கி விடுகிறது. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பு அதைக் கொடுப்பது ‘ஸதகதுல் பித்ராக’ (நோன்புப் பெருநாள் தர்மமாக) அங்கீகரிக்கப்படுகிறது.
தொழுகைக்கு பின்பு கொடுப்பது சாதாரண தர்மமாக அமைகிறது என நபி (ஸல்) கூறினார்கள்’.
‘மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்’.
‘ரமலானின் பெருநாள் தர்மத்தை முஸ்லிம்களான அடிமை-சுதந்திரமானவர், சிறியவர் – பெரியவர், ஆண்-பெண் ஆகியோர் மீது தீட்டாத கோதுமை, அல்லது பேரீச்சம்பழம் இவைகளிலிருந்து ஒரு ஸாஉ அளவை (சுமார் 2½ கிலோ) நபி (ஸல்) நிர்ணயித்தார்கள். பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன்பு அதை வழங்கிடும்படி ஏவினார்கள்’.