இராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம், இராமநாதபுரத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியில் 1 கோடி புதிய உறுப்பினர் களை சேர்த்தல், முழுமையாக கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களின் படி கட்சியில் மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாக சேர்த்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன் விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு உள்ளது.
தென்மண்டல பயிற்சி கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சரி பார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு என வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் தேவிப்பட்டினம் சாலை பேராவூர் என்ற இடத்தில் நடக்கிறது.