தேவர் தங்க கவச விவகாரம் முதல்வர் தலையிட வேண்டும். முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் சே.கருணாஸ் அறிக்கை.
பசும்பொன் தேவர் தங்க கவசம் விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தங்க கவசத்தை அணிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கமுதியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை – தங்க கவசம் அறிக்கையில் கூறியதாவது,
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், அரசியலிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை கௌரவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இக்கவசம் அதிமுகவின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு மதுரையில் உள்ள வங்கியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க – இரு தரப்பு
கடந்த 2017 ல் அ.தி.மு.க.வினர் இரு தரப்பாக செயல்பட்ட போது நினைவாலய பொறுப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தேவர் ஜெயந்தி விழா முடிந்து, மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமே வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
முதல்வருக்கு – கோரிக்கை
அதேபோல் தற்போதும் அ.தி.மு.க இரு தரப்பாக செயல்பட்டு வருவதால் இதனை அ.தி.மு.க விவகாரம் என கருதாமல், பல கோடி மக்களின் உணர்வாக நினைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் வங்கியில் இருந்து எடுத்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், தேவர் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் பசும்பொனில் தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.
நடவடிக்கை
ஜெயந்தி விழா முடிந்த பின்பு மீண்டும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவே வங்கிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.