சாயல்குடி அருகே குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கியஊர் நிர்வாகிகள்
பாதிக்கப்பட்டோர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார்
சாயல்குடி அருகே குடும்பத்தினரை ஊரைவிட்டு 14 ஆண்டுகள் ஒதுக்கி வைத்ததாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர். சாயல்குடி அருகே கன்னிகா புரியைச் சேர்ந்தவர் காசி (61). இவர், தனது குடும்பத்தினருடன் வந்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு மகன்கள், 2 மகள்கள். 2008-ல் எனது 15 வயது மகன் (அப்போதைய வயது), எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததாக ஊர் நிர்வாகிகளான மாரியப்பன், பொன்னுச்சாமி ஆகியோர் குற்றம் சாட்டினர். மேலும் சிறுவனான எனது மகனுக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் இருவரும் சில மாதங்களில் பிரிந்துவிட்டனர். இந்த திருமணத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், என்னையும், எனது குடும்பத்தினரையும் 14 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூறி, நாங்கள் குடியிருந்த வீட்டையும் ஊர் நிர்வாகிகள் அபகரித்துக் கொண்டனர்.
நாங்கள் அருகிலுள்ள கிராமத்தில் 14 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனது எனது இளைய மகன் பாக்கியராஜ் மட்டும் ஊர் நிர்வாகிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால்,அங்குள்ள சுனாமி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
தற்போது 14 ஆண்டுகளாகி விட்ட பிறகும், எங்களை ஊருக்குள்விடவில்லை. மேலும் 4 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், வீட்டை ஒப்படைக்க ரூ. 10லட்சம் தர வேண்டும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.