சுற்றுலா தலங்கள் மற்றும் மத வழிபாட்டு இடங்கள் அதிக உள்ள இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் பொது போக்குவரத்திலும் சொந்த வாகனங்களிலும் வரும் நிலையில் சுற்றுலா தலங்களில் நுழையும் வாகனங்களிடத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொது மக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்பது போன்ற புகார்கள் வரப்பெற்றுள்ளன.
இது தொடர்பாக பெறப்பட்ட விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்து விசாரணைகள் மேற்கொண்டதை அடுத்து பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு கட்டணம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் இடங்களில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறையில் இருக்கும் வரை மட்டுமே வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
நுழைவு வாயில் அருகில் மக்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம், வாகன நுழைவு கட்டண விபரம் குறித்தான பேனர் மற்றும் பலகைகள் வைக்கப்பட வேண்டும். வாகன நுழைவு கட்டண வசூல் செய்யும் நபர் தனது பெயர் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையிலான பெயர் பட்டையை மேல் சட்டையில் அணிந்திருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவு
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தவிர்த்து வேறு எவரும் வாகன நுழைவு கட்டண வசூலில் ஈடுபட கூடாது. வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு கையால் எழுதி ரசீது வழங்கும் நடைமுறை முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்கள், மின்ரசீது வழங்க ஏதுவாக வசூலிப்பாளர்களுக்கு “கையடக்க ரசீது வழங்கும் கருவியை (Handheld device)” வழங்க உத்தரவிடப்படுகிறது. கையடக்க ரசீது வழங்கும் கருவியில் உள்ளிடப்பட்ட தொகை, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினால் திர்மானிக்கப்பட்ட தொகையாக இருக்க வேண்டும்.
மேலும் எந்த சூழ்நிலையிலும் உள்ளாட்சி அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை உள்ளிடப்படக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர்விஷ்ணுசந்திரன், தெரிவித்துள்ளார்