5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு- தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் உள்ள டெல்லி, அரியானா, மிசோரம், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்து தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
மீண்டும் – அதிகரிப்பு
கடந்த 4 நாட்களில் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்து வருகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
கேரளா – பாதிப்பு
கேரளாவில் கடந்த வாரத்தில் 2,321 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது நாடு முழுவதும் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 31.8 சதவீதம் ஆகும். அம்மாநிலத்தில் வாராந்திர பாதிப்பு 13.45 சதவீதத்தில் இருந்து 15.53 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
மிசோரம் – பாதிப்பு
மிசோரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 814 பேருக்கு தொற்று பாதிப்பு. இங்கு வாராந்திர பாதிப்பு 14.38 சதவீதத்தில் இருந்து 16.48 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா – பாதிப்பு
மகாராஷ்டிராவில் ஒரு வாரத்தில் 794 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் ஒரு வார பாதிப்பு 724-ல் இருந்து 826 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல அரியானாவில் வாராந்திர பாதிப்பு 367-ல் இருந்து 416 ஆக உயர்ந்துள்ளது.
கண்காணிப்பு – தீவிரம்
தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதால் 5 மாநிலங்களிலும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சுகாதார துறைக்கு – உத்தரவு
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் 5 மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை, கண்காணித்தல் ஆகியவற்றுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொற்று மற்றும் அதன் பரவல், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை கண்டறிதலும் மிக அவசியம் என கூறப்பட்டுள்ளது.