புதுடில்லி: இந்தியாவில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், 42.30 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் முதல் முறையாக, 17 கோடியை தாண்டியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய மாதமான ஜூலையில், ஆகஸ்டை விட சற்று அதிகமாக 44.44 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டிருந்தன.
இருப்பினும், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்ட 31 லட்சம் கணக்குகளை விட, கடந்த ஆகஸ்டில் இது அதிகம்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கையில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, எத்தியோப்பியா, மெக்சிகோ மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளது; பங்களாதேஷின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு அருகில் இருப்பதாக தரவு தெரிவிக்கிறது.
டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16 கோடியை எட்டிய இரண்டே மாதங்களில் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தைக் கண்டு வருவதால், சிறு முதலீட்டாளர்கள் பங்கு முதலீடுகளில் ஆர்வம் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.