இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி பேசியதாவது, “தி.மு.க. அரசு நகராட்சி, பேரூராட்சிகளில் 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளது. எனவே மக்களின் சொத்துக்களை யார் பறிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்வதாகவும் அதற்கான சட்டத்தை கொண்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியதோடு சரி. தமிழ்நாடு வளமான மாநிலம், பணக்கார மாநிலம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். அதன்படி பார்த்தால் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தற்போது கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.
சொத்து வரி உயர்ந்தால் வீட்டு வாடகை உயரும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களை வாட்டி வதைக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.”
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பட்டத்தில் கழக மருத்துவர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஆணிமுத்து, கழக அம்மா பேரவை இணை செயலாளர் சதன்பிரபாகர், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் || தமிழகத்தில் கடும் நடவடிக்கை – காவல்துறைக்கு முதல்வர் உத்தரவு