பரமக்குடி, மானாமதுரையில் முக்குலத்தோர் இளைஞர் பேரவை, தேவர் அமைப்பினர் சார்பில் தேவரின் 115-ஆவது ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா நடைபெற்றது.
விசேஷ பூஜைகள்
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் கிழக்குப் பகுதியில் முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பில் ஐ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். சக்தி பீடம் அமைப்பின் சார்பில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. முக்குலத்தோர் இளைஞர் பேரவை அமைப்பினர் தேவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உருவப்படத்திற்கு மரியாதை
இதேபோல, வைகை நகர், புதுநகர், காட்டுப் பரமக்குடி, எமனேசுவரம் ஜீவா நகர் ஆகிய பகுதிகளிலும் தேவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் பசும்பொன் கிராமத்துக்கு கார், பேருந்துகளில் சென்றனர். மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கடந்த நாட்களில் தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பாலாபிஷேகம்
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஏ.விளாக்குளம் கிராம மக்கள் தேவர் உருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து கிராமத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக மானாமதுரை சுந்தரபுரம் வீதியில் உள்ள தேவர் சிலைக்கு வந்து சேர்ந்தனர். அதன்பின் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் பூஜைகள் செய்தனர்.
ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம்
இதைத் தொடர்ந்து தேவர் சிலை முன்பு ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம் பாட்டம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத் தினர் செய்திருந்தனர். மேலும் ஏ.விளாக்குளம், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல கிராம மக்கள் தனி பேருந்துகளில் பசும்பொன் சென்றனர்.
கிராமங்கள் தோறும் விழாஇளையான்குடி அருகேயுள்ள மேலாயூர், குமாரக்குறிச்சி, தாயமங்கலம், புக்குளி, உள்ளிட்ட பல கிராமங்களிலும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த கிராம மக்கள் கிராமங்களிலுள்ள தேவர் சிலைக்கும், அவரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். இதே போல, திருப்புவனம் ஒன்றியத்திலும் பல கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.