சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலை பரமக்குடி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜி டில்லியில் நேரில் சந்தித்து ஆர்.தர்மர் எம்.பி கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் ஆர். தர்மர் எம்.பி குறிப்பிட்டுள்ளதாவது, “ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வந்தே பாரத் ரயில் சேவையைத் செயல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தின் முக்கிய வணிக மையமான பரமக்குடியில் வந்தே பாரத் விரைவு ரயிலை நிறுத்தப்படாதது அப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி நகரம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, இளையான்குடி, சாயல்குடி, பார்த்திபனூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கிறது. தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் ஒன்றாக பரமக்குடி ரயில்வே நிலையம் திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற மிளகாய் வணிகம், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் உயர்கல்விக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகள் தற்போது இந்த ரயிலைப் பயன்படுத்த 40கி.மீ தொலைவில் உள்ள மானாமதுரை அல்லது ராமநாதபுரம் சென்று தான் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
பரமக்குடியில் ஒரு நிமிடம் இந்த ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
பின்னர் மனுவைப் பெற்றுக்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர், இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



