காளையார்கோவிலில் பண்டைய கால பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பாண்டியன் கோட்டை இருந்த பகுதியில் தமிழி எழுத்து பொறித்த 2,000 ஆண்டுகள் பழமையான பானை ஓட்டை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கண்டறிந்தனர்.
இது குறித்து புலவர் காளிராசா கூறியதாவது:
இலக்கியங்களில் கானப்போர், கானப்பேரெயில் என காளையார்கோவிலை குறிப்பிட்டுள்ளனர். இங்குள்ள பாண்டியன் கோட்டை முற்றிலும் சேதமடைந்து மண் மேடாகக் காணப்படுகிறது. இந்த இடம் மருதுசகோதரர்கள் காலத்தில் நாணயச்சாலையாக பயன்பட்டதாகக் கூறுகின்றனர். தற்போதும் இந்த கோட்டையை சுற்றிலும் வட்ட வடிவிலான ஆழமான அகழி காணப்படுகிறது. மேலும் நடுவில் நீராவி குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி, வெளியேற வழியில்லாததால், அப்பகுதி குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீரை வெளியேற்ற அவர்கள் வாய்க்கால் தோண்டியுள்ளனர்.
அந்த வாய்க்காலை நாங்கள் ஆய்வு செய்தபோது பானை ஓடு எச்சங்கள் கிடைத்தன. இதில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது. கருப்பு, சிவப்பு நிறமுள்ள இந்த ஓட்டில் உள், வெளிப்புறத்தில் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு எழுத்து சேதமடைந்துள்ளது.இதனால் இப்பகுதியில் முழுமையாக அகழாய்வு நடத்த வேண்டும். என்று அவர் கூறினார்.