நாற்றங்கால் பண்ணை பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குறுங்காடு வளர்ப்பு திட்டம் மற்றும் நாற்றங்கால் பண்ணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ஆய்வு மேற்கொண்டார்.
பயன்பெறும் ஆய்வு
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரியனேந்தல் ஊராட்சியில் உள்ள பூங்கா நகர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணை அமைத்து பராமரிக்கப்பட்டு வருவதையும் மற்றும் குறுங்காடுகள் உருவாக்கி மரங்கள் வளர்த்து வருவதையும் பார்வையிட்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்பெறும் வகையில் மரங்கள் வளர்த்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உரப்புளி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையினை பார்வையிட்டு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள் உள்ள பகுதிகளை சுற்றி காய்கறி தோட்டங்கள் உருவாக்கி பயன்பெற அரசு அறிவித்துள்ளது.அதன்படி அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் உருவாக்குவதற்கு ஏதுவாக ஊராட்சிகள் அளவில் நாற்றங்கால் பண்ணையின் மூலம் முருங்கை, கருவேப்பிலை பயிரிட்டு கன்றுகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும்பொழுது அதன் மூலம் பெறக்கூடிய வருமானம் அந்த ஊராட்சிக்கு கிடைக்கப்பெறும்
இயற்கை வளங்களின் நன்மைகள்
மேலும் நாற்றங்கால் பண்ணையில் மல்லிகை பூச்செடி, செவ்வந்தி பூ செடி, நாவல் மரக்கன்று, கொடுக்காப்புளி, பப்பாளி போன்ற கன்றுகள் வளர்த்து ஊராட்சிகளில் பராமரிக்க கூடிய குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் வளர்த்து குறிய காலத்திட்டத்தில் லாபம் பெறலாம்.
அதுமட்டுமின்றி இத்தகைய கன்றுகள் பொதுமக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்லும் பொழுது நல்ல வரவேற்பை பெறலாம். பொது மக்களுக்கும் ஆர்வமுடன் வாங்கிய பயன் பெற ஏதுவாக இருக்கும்.
தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் இது போன்ற மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி இவ்வாறு ஊராட்சி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான காலியிடங்களை கண்டறிந்து மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு இடங்கள் பாதுகாக்கப்படும் வகையில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
மையங்களில் மூலம் வழங்கப்படும் சத்துணவு
அதேபோல் முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை போன்ற கன்றுகள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் பள்ளியில் காய்கறி தோட்டம் உருவாக்குவதால் மாணவ, மாணவிகளுக்கு மதியம் வழங்கும் சத்துணவிற்கு இத்தகைய மருத்துவ குணம் கொண்ட முருங்கை, கருவேப்பிலை போன்ற பொருட்கள் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் நாற்றங்கால் பண்ணை அமைத்து அந்தந்த பகுதியில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கிடவும் அரசு இடங்களில் குறுங்காடுகள் அமைத்து பராமரித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.