இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்வளத்தை அதிகரிக்க அங்கக பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிடம் அறிவுரை
அங்கக வேளாண்மை ஊட்டச்சத்து மேலாண்மை விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தியதால் மண்ணின் இயற்கை வளம் குறைந்து மண்ணில் வாழும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் மண் வளத்தை பெருக்க பயிர் சுழற்சி முறை ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுதல் பயிர் கழிவுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண்ணெய் வித்துகளின் புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
பசுந்தாள் உரங்கள் பயன்பாடுகள்
பசுந்தாள் உரங்கள் மணிலா, அகத்தி, சித்தகத்தி, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு மற்றும் நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரங்களை சாகு படி செய்யும் நிலத்திலேயே பயிரிட்டு அவை விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும். இவ்வாறு செய்தால் 15 முதல் 20 டன் பசுந்தாள் உரம் மண்ணிற்கு கிடைப்பதோடு 50 முதல் 70 கிலோ தலைச் சத்து, 10-20 கிலோ மணிச்சத்து 40-50 கிலோ சாம்பல் சத்து ஒரு எக்டர் நிலத்திற்கு கிடைக்கும். பசுந்தாள் உரமிடுவதால் மண்ணின் அமைப்பு மேம்படும். நீர்பிடிப்பு திறன் அதிகரிக்கும். மண் அரிமானம் குறையும் மேலும் அவை மண்ணிற்கு ஊட்டம் அளித்து மண் வளத்தைக் காக்கும்.
பசுந்தழை உரங்கள் வயல் வரப்புகள் தரிசு நிலங்கள் சாலையோரங்கள் மற்றும் காடுகள் வளரும் வாகை, புங்கம், வேம்பு, மயில் கொன்றை மரங்களின் இலைகள் மரத்தின் சிறு குச்சி கொம்புகள் ஆகியவையே பசுந்தழை உரத்தின் மூலமாகும். அவற்றை நிலத்தில் இடுவதால் மண்ணின் இயற்பியல் குணங்கள் மேம்படும்.
வேளாண்மை முறையை பின்பற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முன்வரவேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.