இந்தி திணிப்பு தி.மு.க ஆர்ப்பாட்டம்
உதயநிதி அறிவிப்பு
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தியலை மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்த முற்படுகிறது.
அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
மத்திய அமைச்சர் அனைத்துப் பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மத்திய பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை திரும்பப்பெற வலியறுத்தி திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15-ம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.