Tuesday, October 3, 2023
Homeசெய்திகள்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும்.

இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும். நியாயவிலைக் கடைப்பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப்பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார். டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளின் விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த்துறையில் வருமானச்சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்துப் பெறத் தேவையில்லை. விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

விண்ணப்பப்பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (OTP) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும் குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.

அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக்கடை அமைந்திருக்கும் விண்ணப்பப்பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments