இளையான்குடி மிளகாய்க்கு புவிசார் குறியீடு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளகாய் சாகுபடி
இளையான்குடி தாலுகா விற்குட்பட்ட சாலைக்கிராமம், முனைவென்றி,சூராணம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகள், சிவகங்கை மாவட்ட எல்லையை ஒட்டிய ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளான ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி மற்றும் முதுகுளத்துார், சாயல்குடி உள்ளிட்ட பகு திகளில் ஆண்டுக்கு சுமார் 30ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் இந்த குண்டு மிளகாயில் காரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மற்றும் கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்கின்றனர். சம்பாமிளகாயை விட குண்டு மிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இம்மிளகாய் பொடி உணவு, எண்ணெய்,மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர்.எனவே மத்திய அரசு இளையான்குடி குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற்று தந்து, மிளகாய் விளைச்சலை விவசாயிகளிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.
மிளகாய் வரவேற்பு
மிளகாய் பொடிக்கு வரவேற்பு இது குறித்து வியாபாரி ஜெகதீஷ்வரன் கூறியதாவது, இப்பகுதியில் விளையும் மிளகாய் பொடிக்கு வடநாடுகளில் வரவேற்பு அதிகம். இப்பகுதி விவசாயிகள் மிளகாயை பாதுகாக்க ‘குளிரூட்டப்பட்ட கோடவுன்’ கட்டித்தரவேண்டும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கினால், விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்து விளைச்சல் அதிகரிக்கும் என்றார்