தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகரில் வசித்து வருபவர் சரவணக்குமார். அவருக்கு வயது 48. பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான இவருக்கு கடந்த ஜூலை 1-ம் தேதியன்று வாட்ஸ்அப் வீடியோ காலில் நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அதனை ஆன் செய்த எம்.எல்.ஏ சரவணக்குமார் பேசிய போது, எதிர்திசையில் யாரும் பேசாமல் இருந்ததால் சிறிது நேரத்தில் அந்த தொடர்பை துண்டித்துள்ளார்.
ஆபாசமாக பேசுவது போல வீடியோ
பின்னர் சில மணி நேரங்களில் நிர்வாணமான பெண் ஒருவருடன் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆபாசமாக பேசுவது போல வீடியோ ஒன்றை தவறாக சித்தரித்து அதே எண்ணில் இருந்து அனுப்பி உள்ளனர்.
மேலும் இந்த வீடியோ பரவாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் தர வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏ சரவணக்குமார் அவர் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு கடந்த ஜூலை 3-ம் தேதியன்று 5,000 ரூபாயும், 8-ம் தேதியன்று மேலும் 5,000 ரூபாய் என 10,000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.
ராஜஸ்தான் நபர்
ஆனால் தொடர்ந்து அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் அந்த நபர் செயல்பட்டு வந்ததால் பாதிக்கப்பட்ட சரவணக்குமார், நேற்று தேனி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ
இதையடுத்து அவரை பிடிப்பதற்கு சைபர் க்ரைம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கே ஆபாச வீடியோக்கள் அனுப்பி பணம் பறிக்கும் கும்பலால் சாமானிய மக்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.