தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
சிறப்புப் புலனாய்வு குழு
வழக்கு உள்ளூர் காவல் துறையில் தொடங்கி சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று பலரது கைமாறிச் சென்றும் கடந்த 10 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தினறி வந்தனர். இந்நிலையில் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
தீவிர விசாரணை
நீதிமன்றம் உத்தரவின் பேரில் எஸ்.பி ஜெயக்குமார், டி.எஸ்.பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப்படை புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறைக் கைதிகள்
ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்குள் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
தமிழக பிரபல ரவுடிகள்
இவ்வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 ரவுடிகளின் பட்டியலை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வெளியிட்டனர். தமிழகத்தின் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பட்டியல் வெளியாகி உள்ளது.