Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்நியாயவிலைக் கடை வாரியாக முகாம் பயனாளிகளைத் தேர்வு செய்ய நடைபெறுகிறது 

நியாயவிலைக் கடை வாரியாக முகாம் பயனாளிகளைத் தேர்வு செய்ய நடைபெறுகிறது 

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிக்கப்பட்டுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாய விலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாய விலைக் கடைகளில் 24.07.2023 முதல் 04.08.2023 வரையும், இரண்டாம் கட்டமாக 449 நியாய விலைக்கடைகளில் 05.08.2023 முதல் 16.08.2023 வரையும் தினசரி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் 05.30 மணி வரையிலும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெறும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில், 775 இடங்களில் நடைபெறவுள்ள முகாம்களில் விண்ணப்பம் பதிவு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த தன்னார்வல்கள் 1192 பேரும், முகாம் பொறுப்பு அலுவலர்களாக கிராம நிர்வாக அலுவலர், வரி வசூலிப்பவர், ஊராட்சி செயலர், கிராம உதவியாளர் நிலையில் 775 பேரும், பதிவு செய்திட வருகை தரும் விண்ணப்பதார்களுக்கு விண்ணப்ங்களைப் பதிவு செய்திட உதவி புரிவதற்காக மகளிர் சுய உதவிக்குழு தன்னார்வலர்கள் 836 பேரும், கண்காணிப்பு பணிகளுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் 5 முகாம்களுக்கு 1 அலுவலர் என 155 மண்டல அலுவலர்களும், முகாம்களை மேற்பார்வை செய்வதற்காக வட்டாட்சியர் நிலையில் 15 முகாம்களுக்கு ஒரு அலுவலர் என 22 அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

வட்ட அளவில் இத்திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் மாவட்ட நிலை கண்காணிப்பு அலுவலர்களாக, இராமநாதபுரம் வட்டத்திற்கு, வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர், திருவாடானை வட்டத்திற்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), கமுதி வட்டத்திற்கு, உதவி ஆணையர் (ஆயம்), முதுகுளத்தூர் வட்டத்திற்கு மாவட்ட மேலாளர் (தாட்கோ), கடலாடி வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர், கீழக்கரை வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், இராமேஸ்வரம் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பபதிவு பணியில் ஈடுபட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி 13.07.2023, 14.07.2023 ஆகிய 2 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள், எந்த நாளில் முகாமிற்கு வர வேண்டும் என்பதற்கான டோக்கன் சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலமாக முகாம் துவங்குவதற்கு 3 தினங்களுக்கு முன்பாக வீடு வீடாக சென்று நேரில் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் 21 வயதிற்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகள்/ குடும்ப அட்டையில் பெயர் உள்ள தகுதி வாய்ந்த இதர மகளிரில் ஒருவர் மட்டும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில் முகாம் நடைபெறும் மையத்திற்கு விண்ணப்பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியையும் கொண்டு செல்ல வேண்டும். வேறு எந்த ஆவணங்களும் கொண்டு செல்லத் தேவையில்லை. விண்ணப்பதாரர்களின் குடும்ப அட்டை செயல்பாட்டில் இருந்து வரும் நியாய விலைக் கடைக்குட்பட்ட முகாம்களில் மட்டுமே நியாய விலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்படும் நாளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்படும் நாளில் பதிவு செய்யத் தவறினால், முகாம் நடைபெறும் கடைசி இரண்டு நாட்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு வசதிகளும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் இருக்கை வசதி, குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள், முறைகேடான செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments