இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
சங்கப்பிரதிநிதிகளின் கோரிக்கை
இக்கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், ஊரணி தூர்வாருதல், விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்குவது, கண்மாய்கள் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப்பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். விவசாய பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகளுக்கு துறைவாரியாக அலுவலர்கள் பதிலளித்தனர்.
விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வேளாண்மைத்துறை அலுவலர்களை நியமித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதவிர அவ்வப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டரியும் பொருட்டு விவசாய சங்க பிரதிநிதிகளின் குறைகளை கேட்டு அவற்றிற்கு நிவர்த்தி செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்கள்.
குறைகளை தீர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளையும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் எடுத்துரைப்பார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அதன் தொடர்புடைய அலுவலகர்களை கொண்டு தீர்வு காணப்படும். இன்றைய தினம் நடைபெறும் இக்கூட்டத்தில், வறட்சி நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
2022 -23 வறட்சி நிவாரணம் தொடர்பாக அரசாணை பெறப்படும் நிலையில் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நயினார்கோயில் நாகநாதர்கோவில் ஊரணிக்கு வரும் கால்வாயை தூர்வார உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கோடை உழவு மானியம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்காக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை கொண்டு தகுதியான நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கணினி திருத்தம் ஒவ்வொரு பிர்க்கா வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், வட்டார வாரியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார் .
உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது
முன்னதாக கூட்டரங்க வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பாக வைக்கப்பட்டிருந்த வேளாண் தொடர்பான கண்காட்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.