பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்கள் அனைவரும் திட்டத்தை பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செறிவூட்டப்பட்ட உணவு
இராமநாதபுரம் ஸ்சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் வகையிலான உணவுத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
செறிவூட்டப்பட்ட அரிசி
பேசியதாவது, “தமிழ்நாடு அரசு செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களான அயோடின் உப்பு மற்றும் பாமாயில் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது வழங்கி வருகிறது. சத்துணவுத்திட்டம் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் கலந்த உப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திலிருந்து பொது விநியோகத்திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியும் வழங்கப்பட உள்ளது.
ஏழை எளிய மக்கள்
ஏழை, எளிய மக்களால் வைட்டமின் மற்றும் நுண் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், சாதாரண அரிசியில் வைட்டமின்கள் போலிக் அமிலம் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்களை கலந்து செறிவூட்டல் என்றும் சத்தான அரிசியினை அரசு வழங்கவுள்ளது.
4 கோடி 22 லட்சம்
ஊட்டச்சத்தினை அதிகரிக்கவும் அனைவரும் ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும் சுமார் 4 கோடி 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்கள் வழங்கப்பட உள்ளது. இத்தகைய சிறப்பு திட்டத்தை நமது மாவட்டத்திற்கு வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு கலரில் அரிசி
பொதுமக்களுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் மேலும் அரிசி பல்வேறு கலரில் இருக்கும். இதுபோன்ற வெள்ளை அரிசிகளை பொதுமக்கள் கெட்டுப்போன அரிசி என நினைக்க வேண்டாம். இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தான் நமது ஆரோக்கியத்தை காக்க அரசு வழங்குகிறது.
ஆரோக்கியத்துடன் வாழ
எனவே பொதுமக்கள் எவ்வித தயக்கமின்றி பொது விநியோக திட்டத்தின் கீழ் அரசு வழங்கவுள்ள செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவதற்கு முன்வர வேண்டும். இச்சிறப்பு வாய்ந்த இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பல்வேறு வகையான சாதங்கள்
தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியில் பல்வேறு வகையான சாதங்கள் தயார் செய்யப்பட்டு மக்கள் பார்த்து பயன்பெறும் வகையிலான கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ராமநாதபுரத்தில் உணவு திருவிழா
RELATED ARTICLES